Sunday, August 15, 2021

சக்கரவர்த்தி கீரை

 

மகசூல் சக்கரவர்த்தியாம் சக்கரவர்த்தி கீரை


Share    

பத்துவாக்கீரை எனப்படும் சக்கரவர்த்தி கீரை (சீனபோடியம் ஆல்பம்) பீட்ரூட் தாவர குடும்பத்தை சேர்ந்தது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது. இலைகள் வெளிர்பச்சை நிறத்திலும் இளம் இலைகளின் நடுப்பகுதி ஊதா அல்லது லேசான ரோஜா நிறத்திலும் காணப்படும். நூறு கிராம் கீரையில் 3.7 கிராம் புரதம் 0.4 கிராம் கொழுப்பு 2.9 கிராம் மாவுச்சத்து 150 மி. கிராம் சுண்ணாம்புச் சத்து 80 மி.கி., பாஸ்பரஸ் 4.2 மி.கி.,ரிபோபிளேவின் 0.6 மி.கிராம் நியாசின் 35 மி.கி., வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. விதைகளை நேரடியாக தூவி விதைக்கலாம். அல்லது நாற்றங்காலில் விதைத்து 30 நாட்கள் கழித்து நடவு செய்யலாம்.

வயலில் 30 செ.மீ க்கு 15 செ.மீ இடைவெளியில் நடவு செய்தால் 35-40 நாட்கள் கழித்து கீரைகளை வேருடன் பிடுங்கியோ மேற்பரப்பில் கிள்ளியோ அறுவடை செய்யலாம். பாசிபருப்புடன் வேகவைத்து சாப்பிடலாம். ஊட்டி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தால் 2001ல் வெளியிடப்பட்ட ஊட்டி 1 என்ற ரகம் கீரை அறுவடைக்கு சிறந்தது.

இது 38 செ.மீ. உயரம் வரை வளரும். எக்டேருக்கு 31.5 டன் கீரை மகசூல் கிடைக்கும். குறுகிய கால வகை கீரை ரகம் என்பதால் ஆண்டு முழுவதும் பலன் தரும். சமவெளிப்பகுதியில் எக்டேருக்கு 17 டன் கிடைக்கும். மலை பிரதேசத்தில் விதைத்ததிலிருந்து 55 நாட்களுக்குள்ளும் சமவெளிப்பகுதியில் 50 நாட்களிலும் அறுவடை செய்யலாம். மலைப்பகுதியில் அறைவெப்பநிலையில் ஐந்து நாட்களும் மற்ற பகுதிகளில் இரண்டு நாட்கள் பாதுகாக்கலாம்.

இது தானிய விளைச்சலுக்கும் ஏற்ற ரகம். எக்டேருக்கு 1.2 டன் கிடைக்கும். இதன் வயது 145 முதல் 180 நாட்கள். இந்த தானியத்தையும் சமைக்கலாம். இது வறட்சி மற்றும் அதிக குளிரை தாங்கக்கூடியது. இது சொகோஸ்போரா, கொலிடோடிரைகம்இலைப்புள்ளி நோய் மேக்ரோபோமினா வேரழுகல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை கொண்டது. உயர்ந்த நடுத்தர மற்றும் தாழ்ந்த மலைப்பகுதிகளிலும் பயிரிடலாம். ஊட்டி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள் ஒரு கிலோ ரூ.350க்கு கிடைக்கிறது. போன் - 0423 - 244 2170.

மாலதி, உதவி பேராசிரியர்
விஜயகுமார், பேராசிரியர் வேளாண்மை அறிவியல் நிலையம்
சந்தியூர், சேலம்
97877 13448

No comments:

Post a Comment