Thursday, October 21, 2021

மண் வளத்தை பராமரிப்பது எப்படி

பயிர்களுக்கான மண் வளத்தை பராமரிப்பது எப்படி


தொடர்ந்து விவசாயம் நடைபெறும் நிலங்களில் துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டினம், மாங்கனீஸ், குளோரின் போன்ற நுண்ணுாட்டச்சத்துகள் குறைந்தளவிலேயே காணப்படுகிறது. இதனால் பயிர்களின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே பயிர்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மற்றும் மண்வள பராமரிப்பு அவசியம்.

ரசாயன உரங்களை தனியாக இடுவதை விட அங்கக உரங்களான எரு, கம்போஸ்ட், பசுந்தாள், பசுந்தழை உரங்களுடன் சேர்த்து இடும் போது நல்ல பலன் கிடைக்கிறது. ரசாயன உரங்கள் ஆரம்பகால வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. அங்கக உரங்கள் மண்ணில் சிதைந்து ஊட்டச்சத்துகளை சீராக வெளிப்படுத்தி பயிரின் வளர்ச்சி பருவம் முழுவதும் கொடுக்கிறது. மேலும் இவை பயிருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. மண்ணை பொலபொலப்பாக்கி மண்வாழ் உயிரின பெருக்கத்திற்கும் உவர், களர், அமிலத்தன்மை உருவாகாமல் தடுக்கிறது.
மண்ணுக்கு தழைச்சத்து சேர்க்கும் பயறு வகை பயிர்களை அந்தந்த பயிருக்கான ரைசோபியம் விதைநேர்த்தி செய்து பயிரிட வேண்டும். பண்ணையில் கிடைக்கும் பயிர்க் கழிவுகளை மட்க வைத்து உரமாக தரலாம்.
சர்க்கரை ஆலை கழிவுகள், மட்கிய தேங்காய் நார் கழிவுகள், எண்ணெய் ஆலையின் புண்ணாக்கு கழிவுகளை பயன்படுத்தலாம். மாடு, ஆடு, கோழி, பன்றியின் எருவை பயன்படுத்தலாம். பசுந்தாள், பசுந்தழை உரமிடலாம்.

மண்ணில் உள்ள சத்துகளின் அளவு அடிக்கடி மாறுபடும். எனவே சத்துகளின் அளவை கண்டறிய மண் ஆய்வு செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து சுற்றுச்சூழல் மாசுபடாத அளவில் மகசூல் இலக்குக்கு ஏற்றாற்போல சமச்சீர் உரமிட வேண்டும். ஒருங்கிணைந்த மண்வள பராமரிப்புக்கு இயற்கை எரு, ரசாயன உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை சரியான விகிதத்தில் தொடர்ந்து பயன்படுத்தி நிறைவான மகசூல் பெறலாம்.

மோகன்தாஸ், 

தலைவர் பயிர் மேலாண்மை துறை வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம்
ஈச்சங்கோட்டை , 
தஞ்சை - 614 902

94880 49234

Friday, October 15, 2021

மலையில் சுழற்சி முறையில் பந்தல் காய்கறிகள்

மலைப்பகுதியாக இருந்தாலும் ஒரே பயிர் சாகுபடி செய்யாமல் பட்டர்பீன்ஸ், கொடி அவரை, சவ்சவ் என சுழற்சி முறையில் மாற்றி மாற்றி பயிர் சாகுபடி செய்கிறோம் என்கிறார் மதுரை தென்மலை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி அனுசுயா.

பந்தல் காய்கறிகள் குறித்து அவர் கூறியது: பட்டர்பீன்ஸ் 90 நாள் பயிர், கொடி அவரை, சவ்சவ் நான்காம் மாதத்திலிருந்து ஓராண்டு வரை பலன் தரும். ஒரு ஏக்கரை இரு பகுதியாக பிரித்து பட்டர்பீன்ஸ் சாகுபடி செய்துள்ளோம். பந்தல் ஒருமுறை முதலீடு செய்வது தான்.

கொடைக்கானல் மார்க்கெட்டிலிருந்து ஒன்றரை கிலோ ரூ.1500க்கு பீன்ஸ் விதைகள் வாங்குகிறோம். விதைப்பதற்கு முன்பாக மண்ணை கொத்தி கிளறி தண்ணீர் ஊற்றுவோம். மறுநாள் சிறு சிறு சதுரமாக வெட்டி அதில் பீன்ஸ் விதையை ஊன்றுவோம். 4வது நாள் தண்ணீர் விட்டால் 8 ம் நாள் முளைவிடும். நான்கு இலை பயிராக வந்தவுடன் களை எடுத்துவிட்டு யூரியா துாவி தண்ணீர் விடுவோம்.

15வது நாள் கொடி படர ஆரம்பிக்கும். துாரில் உள்ள இரண்டு இலையில் நுாலை கட்டி பந்தலில் சேர்த்து கட்டி விடுவோம். 30ம் நாளில் பிஞ்சுவிடும். 60 ம் நாளில் காய் காய்க்க ஆரம்பிக்கும். 60 - 90 வரை நாள் வரை அறுவடை செய்யலாம். தினமும் 150 கிலோ வரை கிடைக்கும். 10 கிலோ ரூ.1000க்கு விற்போம்.

90 நாளில் கொடி காய்ந்து விடும். அதை வேருடன் பிடுங்கி விட்டு ஒரு பகுதியில் சவ்சவ், ஒரு பகுதியில் அவரை சாகுபடி செய்வோம். சவ்சவ் 3ம் மாதத்தில் பந்தலில் படர்ந்து விடும். 4வது மாதம் ஓராண்டு வரை காய்க்கும். ஏக்கருக்கு குறைந்தது 3 டன் காய்கள் கிடைக்கும். மழை பெய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

அவரையும் விதை போட்ட 8 ம் நாள் முளைவிடும். 4வது மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு தினமும் 2 மூடை காய் கிடைக்கும். விலையைப் பொறுத்து ரூ.30 - 40 வரை கிலோவுக்கு கிடைக்கும்