Wednesday, September 15, 2021

ரசாயனத்திடம் பாடம் கற்று இயற்கைக்கு மாறினேன்

ரசாயனத்திடம் பாடம் கற்று இயற்கைக்கு மாறினேன்


ஒன்பது ஏக்கரில் முருங்கை விவசாயம் செய்தேன். நல்ல சாகுபடி நிறைய விளைச்சல். பூச்சித்தொல்லைக்காக மருந்து தெளித்தேன். மண்ணும் பயிர்களும் வீணானது. முருங்கையை அழித்து விட்டு மொத்தமாக இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டேன் என்கிறார் மதுரை திருமங்கலம் சவுடார்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுப்புராஜ்.

இயற்கை என்றால் விதைகள் முதல் உரம், பூச்சிக்கொல்லி அனைத்தையும் வயலிலேயே தயாரித்து விளைச்சலை பெருக்கும் நுட்பத்தை விவரிக்கிறார் சுப்புராஜ்.
நானும் மனைவி பாரதியும் தோட்டத்தை பராமரிக்கிறோம். எங்களிடம் 3 நாட்டு மாடுகள் உள்ளன. அதன் மூலம் ஜீவாமிர்தம் தயாரிக்கிறோம். இயற்கை உரங்களை தண்ணீரில் கரைத்து சொட்டுநீர் முறையில் பயிருக்கு பாய்ச்சுகிறோம். மொத்த முள்ள 33 ஏக்கரிலும் இயற்கை விவசாயம் தான். ஏக்கர் வாரியாக பிரித்து நாரத்தை, அத்தி, சீத்தா, கொய்யா, கொடுக்காபுளி, நாவல், சப்போட்டா, நெல்லிக்காய், சிவப்பு கொய்யா மரங்களை பராமரிக்கிறேன்.

திருமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரபா வழிகாட்டுதலில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு எக்டேர் கொடுக்காப்புளிக்கு ரூ.20ஆயிரம், அரை எக்டேர் அத்திக்கு ரூ.15 ஆயிரம் மானியம் பெற்றோம். தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் அடர்நடவு கொய்யா 1.20 எக்டேர் சாகுபடிக்கு ரூ.21ஆயிரத்து120 மானியம், சொட்டு நீர் பாசனத்தின் கீழ் 4.71 எக்டேருக்கு ரூ.ஒரு லட்சத்து 81ஆயிரத்து 417 மானியம் பெற்றோம். மனைவி பாரதியின் பெயரில் 3.78 எக்டேர் சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.ஒரு லட்சத்து 14ஆயிரத்து 400 மானியம் பெற்றுள்ளோம்.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தின் திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறைக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.

தோட்டத்தில் உள்ள இலை, தழைகளை மட்க செய்து குப்பை உரமாக மாற்றுவேன். வாரந்தோறும் குப்பை உரம், ஜீவாமிர்தம், எருக்கஞ்செடி சாறு, நுண்ணுாட்ட கரைசல் என தேவைக்கேற்ப கலந்து பயிருக்கு பாய்ச்சுகிறேன். எருக்கஞ்செடியை கிளைகளுடன் பறித்து சிறு துண்டுகளாக வெட்டி 200 லிட்டர் தண்ணீரில் 10 நாட்கள் ஊறவைக்கிறோம். தினமும் நன்றாக கலக்கி விட்ட பின் அதை கொய்யா, அத்தி மரங்களுக்கு பாய்ச்சுவதால் போரான் சத்துகள் கிடைக்கிறது. இதுதவிர மீன் அமிலமும் தயாரிக்கிறோம்.
பூச்சிக்கொல்லிக்கு இயற்கை முறையில் பயிர்களுக்கும் மண்ணுக்கும் பாதுகாப்பான திரவ மருந்துகளை பயன்படுத்துகிறேன்.

ஜீவாமிர்தம் பாய்ச்சினாலே மண்ணின் தன்மை பொலபொலப்பாகும். மண்புழுக்கள் பெருகும். மண்புழு உரம் தனியாக கொடுக்க வேண்டியதில்லை. எந்த இடத்தையும் எந்த சூழ்நிலையிலும் தரிசாக விடுவதில்லை. அவ்வப்போது பசுந்தாள் பயிர்களை நடவு செய்து மடக்கி உழுது மண்ணை பொன்னாக்குகிறோம். இதனால் மண்ணும் மனிதனுக்கும் கேடில்லாத இயற்கையான பழங்களை உற்பத்தி செய்யும் மனதிருப்தி கிடைக்கிறது
என்றார். அலைபேசி: 99408 33727.
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை

No comments:

Post a Comment