Thursday, October 21, 2021

மண் வளத்தை பராமரிப்பது எப்படி

பயிர்களுக்கான மண் வளத்தை பராமரிப்பது எப்படி


தொடர்ந்து விவசாயம் நடைபெறும் நிலங்களில் துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டினம், மாங்கனீஸ், குளோரின் போன்ற நுண்ணுாட்டச்சத்துகள் குறைந்தளவிலேயே காணப்படுகிறது. இதனால் பயிர்களின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே பயிர்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மற்றும் மண்வள பராமரிப்பு அவசியம்.

ரசாயன உரங்களை தனியாக இடுவதை விட அங்கக உரங்களான எரு, கம்போஸ்ட், பசுந்தாள், பசுந்தழை உரங்களுடன் சேர்த்து இடும் போது நல்ல பலன் கிடைக்கிறது. ரசாயன உரங்கள் ஆரம்பகால வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. அங்கக உரங்கள் மண்ணில் சிதைந்து ஊட்டச்சத்துகளை சீராக வெளிப்படுத்தி பயிரின் வளர்ச்சி பருவம் முழுவதும் கொடுக்கிறது. மேலும் இவை பயிருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. மண்ணை பொலபொலப்பாக்கி மண்வாழ் உயிரின பெருக்கத்திற்கும் உவர், களர், அமிலத்தன்மை உருவாகாமல் தடுக்கிறது.
மண்ணுக்கு தழைச்சத்து சேர்க்கும் பயறு வகை பயிர்களை அந்தந்த பயிருக்கான ரைசோபியம் விதைநேர்த்தி செய்து பயிரிட வேண்டும். பண்ணையில் கிடைக்கும் பயிர்க் கழிவுகளை மட்க வைத்து உரமாக தரலாம்.
சர்க்கரை ஆலை கழிவுகள், மட்கிய தேங்காய் நார் கழிவுகள், எண்ணெய் ஆலையின் புண்ணாக்கு கழிவுகளை பயன்படுத்தலாம். மாடு, ஆடு, கோழி, பன்றியின் எருவை பயன்படுத்தலாம். பசுந்தாள், பசுந்தழை உரமிடலாம்.

மண்ணில் உள்ள சத்துகளின் அளவு அடிக்கடி மாறுபடும். எனவே சத்துகளின் அளவை கண்டறிய மண் ஆய்வு செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து சுற்றுச்சூழல் மாசுபடாத அளவில் மகசூல் இலக்குக்கு ஏற்றாற்போல சமச்சீர் உரமிட வேண்டும். ஒருங்கிணைந்த மண்வள பராமரிப்புக்கு இயற்கை எரு, ரசாயன உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை சரியான விகிதத்தில் தொடர்ந்து பயன்படுத்தி நிறைவான மகசூல் பெறலாம்.

மோகன்தாஸ், 

தலைவர் பயிர் மேலாண்மை துறை வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம்
ஈச்சங்கோட்டை , 
தஞ்சை - 614 902

94880 49234

No comments:

Post a Comment