Tuesday, March 11, 2014

மரபணு மாற்று விதை

'மனித உடலுக்குள்ளும் ஊடுருவிய பி.டி..!' - அதிர வைக்கும் ஓர் ஆராய்ச்சி முடிவு


''வேண்டாம், இந்த மரபணு மாற்றுப் பயிர்கள்...
இயற்கைக்கு எதிராக விளையாட வேண்டாம்...
அது மனித வாழ்க்கைக்கே உலை வைத்துவிடும்...''
-இப்படியெல்லாம் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புக் குரல் கேட்கிறது!

ஆனால், மரபணு மாற்று விதைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு... விஞ்ஞானிகள் மற்றும் ஆட்சியாளர்கள் முட்டுக் கொடுப்பதால்... உலகம் முழுக்கவே பெரும்பாலான அரசாங்கங்கள் அதற்கு ஆதரவாகவே உள்ளன.

இந்தச் சூழலில்... 'மரபணு மாற்றுப் பயிர்களால் மனிதர்களுக்கு பாதிப்பு' என்பதை கனடா நாட்டில் நடந்த ஓர் ஆராய்ச்சி முடிவு தற்போது வெளிச்சம் போட்டிருப்பது... உலக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பூச்சிகளின் தாக்குதல்களுக்குத் தப்பித்து வளரக் கூடிய எதிர்ப்பு சக்தியை, விதையிலேயே உருவாக்குவதுதான் மரபணு மாற்றுப் பயிர். பருத்தியை எடுத்துக் கொண்டால்... மண்ணிலுள்ள பி.டி. (பேசில்லஸ் துருஞ்சியன்சிஸ்) எனும் பாக்டீரியாவின் நச்சை (இதை புரதம் என்று சொல்கின்றனர், இப்பயிரை உருவாக்கிய விஞ்ஞானிகள்), பயிருக்குள் செலுத்தி அதன் மூலம் எதிர்ப்பு சக்தியை பருத்தி விதையிலேயே உண்டாக்குவார்கள். இப்படி ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு விதத்தில் மரபணு மாற்று விதைகளை உண்டாக்கும் வேலைகள் தீவிரமாகவே நடக்கின்றன.

அவ்வளவாக உணவுக்குப் பயன்படாத பருத்தியில் ஆரம்பித்த மரபணு மாற்றுப் பயிர் ஆராய்ச்சி... களத்துக்கும் வந்துவிட்டது. இந்தியா உட்பட பல நாடுகளில் மரபணு மாற்றுப் பருத்தியை தற்போது விவசாயிகள் விளைவித்து வருகின்றனர்.
அடுத்தக் கட்டமாக உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், சோயாபீன் என்று உணவுப் பொருள்களிலும் புகுந்து, இவையெல்லாம் பல நாடுகளில் விவசாய நிலங்களில் பயிர் செய்யப்படுகின்றன. 

பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் இந்த விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக கத்திரிக்காய், அரிசி, கோதுமை என்று பல பயிர்களிலும் ஆராய்ச்சி நடந்து, அவையும்கூட பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

ஆனால், இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் பலமான எதிர்ப்பு கிளம்பவே... தற்போதைக்கு கத்திரிக்காய், அரிசி போன்ற உணவுப் பயிர்களில் மரபணு மாற்று விதைகள் களத்துக்கு வருவது தடைபட்டு நிற்கிறது!

இந்நிலையில்தான், கனடாவில் உள்ள 'ஷெர்ப்ரூக்’ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், மரபணு மாற்றுப் பயிரில் உள்ள நச்சு, மனித ரத்தத்திலும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், ஷெர்ப்ரூக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வந்த 30 பெண்களிடமும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வந்த 39 பெண்களிடமும் ஆய்வை மேற்கொண்டனர். அதில், அப்பெண்களின் ரத்தத்தில், பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட 'சி.ஆர்.ஒய்.-1.ஏ.பி’ (C.R.Y.1.A.B) என்கிற நச்சு (புரதம்) இருந்ததை உறுதி செய்துள்ளனர். பிறந்த குழந்தைகளிடமும், அவர்களின் தொப்புள்கொடிகளிலும் இந்த நச்சு இருந்தது உறுதியாகியுள்ளது. அதனால், இந்த நச்சு... தாய் மூலமாக குழந்தைகளுக்கும் பரவும் என்று அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு வந்த கர்ப்பிணிகளில் 93 சதவிகிதத்தினரின் உடலிலும், கருவில் இருந்த குழந்தைகளில் 80 சதவிகிதத்தினரின் உடலிலும், கருத்தடைக்கு வந்த பெண்களில் 69 சதவிகிதத்தினர் உடலிலும் இந்த நச்சு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண்களுக்கோ... அல்லது இவர்களின் கணவர்களுக்கோ பூச்சிக்கொல்லிகளுடன் எந்தத் தொடர்பும் கிடையாது.

கனடா அரசு, சாப்பிடுவதற்கு ஏற்றது என்று தரப்படுத்தியிருக்கும் உணவைத்தான் சாப்பிட்டுள்ளனர் (அரசு தரப்படுத்திய உணவுப் பொருட்களில் மரபணு மாற்றப்பட்ட சோயாபீன், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு ஆகியவையும் அடக்கம்). அதுதான் இந்த நச்சு மனித உடலில் கலப்பதற்கு காரணமாகியிருக்கிறது. ஏற்கெனவே, மரபணு மாற்று மக்காச்சோளத்தை உணவாக உட்கொண்ட கால்நடைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவிலும், கால்நடைகளின் குடலில் இதே வகையான நச்சு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'இந்த நச்சு, மனிதர்களின் உடலிலிருந்து அவ்வளவு எளிதாக வெளியேறாது. இதன் காரணமாக புதுவிதமான பிரச்னைகளை சம்பந்தபட்டவர்கள் எதிர்கொள்ள நேரிடும்' என்றெல்லாம் அதிர வைக்கும் இந்த ஆராய்ச்சி முடிவானது... பல்வேறு விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு... இறுதியாக, கனடாவில் வெளிவரும் நச்சு தொடர்பான பிரபல பத்திரிகையில் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.


இத்துறையில் நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்து வரும் கனடா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்அஜீஸ் ஆரிப், சாமுவேல் லெப்லான்க் ஆகியோர், ''எங்கள் நாட்டில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வின் புள்ளிவிவரங்கள், மனித உடல்நலத்தின் பாதுகாப்பை முறைபடுத்தும் நிறுவனங்களுக்கு மிக உதவியாக இருக்கும்... மரபணு மாற்றுப்பயிர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறந்த முடிவுகளை எடுக்கவும் இது உதவியாக இருக்கும்'' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் பற்றி பேசும் டெல்லியைச் சேர்ந்த பேராசிரியரும், மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிரான அமைப்புகளில் அங்கம் வகிப்பவருமான தேவேந்திர சர்மா, ''பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் என்றெல்லாம் தீவிரமாக இருக்கும் கனடா போன்ற நாட்டிலேயே... சர்வசாதாரணமாக இந்த மரபணு மாற்றுப்பயிர்கள் விளைவிக்கப்பட்டு, தற்போது இத்தகையப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

அப்படியிருக்க, இந்தியா போன்ற நாடுகளில்... இந்தப் பயிர்கள் மிக அபாயகரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே உண்மை. இங்கே, விழிப்பு உணர்வு போதுமான அளவில் இல்லாததும்... மேல்மட்டத்தில் இருப்பவர்கள் லஞ்ச, லாவண்யங்களில் புரள்வதும்... இதுபோன்ற பயிர்களின் விதைகளை விற்பனை செய்ய வரும் நிறுவனங்களுக்கு சாதகமானதாகிவிடும்.

மரபணு மாற்றுப் பருத்தி மட்டும் இங்கே ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, அவற்றின் விதைகளில் இருந்து இங்கே எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த எண்ணெய் மூலமாக... இந்திய மக்களின் உடலிலும் ஏற்கெனவே இந்த பி.டி நஞ்சு ஊடுருவிவிட்டது. ஆனால், இங்கே உள்ள அரசாங்கம் அதைப்பற்றி அக்கறையின்றி இருக்கிறது. 

காரணம்... இவர்கள்தான் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு தீவிர ஆதரவாளர்களாயிற்றே!'' என்று நொந்து கொண்டார்!

உண்மைதானே!

No comments:

Post a Comment

The Kashmir Only to India